நீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் வைத்து சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் காணொலி மற்றும் ஒளிப்பட ஆதாரங்கள் உள்ளன,
அவற்றை வைத்து சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதாக முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பொலிஸாரின் சமர்ப்பணத்தை ஏற்ற மன்று, வழக்கு விசாரணையை வரும் ஒக்ரோபர் 14ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை எனும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி புற்று நோய் காரணமாக கொழும்பில் 21ஆம் திகதி காலமானார்.
அவருடைய உடலை நாயாறு இராணுவ முகாமை அண்டிய சூழலில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டது.
நீதிமன்றின் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை அடையாளம் காட்டுவதற்காக சட்டத்தரணிகள் நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதிக்குச் சென்றிருந்தனர்.
அதன்போது சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் மற்றும் மூவர் பௌத்த பிக்குவால் தாக்கப்பட்டனர். இதுதொடர்பில் அன்றைய தினமே சட்டத்தரணி கே.சுகாஷ், முல்லைத்தீவு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் சட்டத்தரணி சுகாஷ் மீதான தாக்குதல் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் தனியாக பி அறிக்கை ஒன்றை பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.
தாக்குதல் நடத்தியவர்களை மன்றில் முற்படுத்தினால் அவர்களை அடையாளம் காட்டத்தயார் என சட்டத்தரணிகளால் மன்றுரைக்கப்பட்டது.
சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் காணொலி மற்றும் ஒளிப்பட ஆதாரங்கள் உள்ளன, அவற்றை வைத்து சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவோம் என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.
அதனால் வழக்கு விசாரணை வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.