கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையங்களை இளைஞர்களே தேடி அழித்துள்ளனர்.கிளிநொச்சி கோணாவில் கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்துமாறு காவல்துறையினருக்கு அறிவித்திருந்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில், கிராமத்தைச் சேர்ந்த சுயாதீன இளைஞர்கள் குழு ஒன்று தாங்களாக முன் வந்து கசிப்பு உற்பத்தி நிலையங்களை முற்றுகையிட்டு அழித்துள்ளனர்.
15 க்கு மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து கோணாவில், யூனியன்குளம் பிரதேசங்களின் காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையங்களே முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இதன்போது 15ற்க்கு மேற்பட்ட பரல்கள், 25 க்கு மேற்பட்ட பிளாஸ்ரிக் கான்கள் என்பவற்றை வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். தொடர்ச்சியாக குறித்த இளைஞர்கள் காடுகளுக்குச் சென்று கசிப்பு உற்பத்தி நிலையங்களை தேடி அழித்து வருகின்றனர்.குறித்த இளைஞர்களின் செயற்பாடுகள் கிராம மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, பொது மக்கள் அவர்களை பாராட்டியும் வருகின்றனர்.