பாடல் பெற்ற திருத்தலமும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குச் செல்லும் பாதையில் அமைக்கப்படவிருந்த வரவேற்பு வளைவைத் தடுத்து நிறுத்தியமை தொடர்பாக ஆராய்வதற்காகவும், எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கானதுமான விசேட கூட்டமொன்று இன்று சனிக்கிழமை(20) பிற்பகல்-04 மணி முதல் யாழ்.நல்லூர் கோவில் வீதியிலுள்ள அகில இலங்கை இந்துமாமன்ற யாழ்.பிராந்தியப் பணிமனையில் நடைபெற்றது.
அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கமைய திருக்கேதீஸ்வர வளைவு உடைத்தமையும், மன்னார் பிரதேச சபை திருக்கேதீஸ்வர வளைவு அமைப்பதற்கு அனுமதி வழங்கிய பின்னரும் மன்னார் மறைமாவட்ட ஆயர் தடுத்தமையும் தவறு எனவும் முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர திருப்பணிச் சபை திருக்கேதீஸ்வரத்தின் சார்பில் நுழைவாயில் அகற்றப்பட்ட அதேயிடத்தில் நுழைவாயிலை நிரந்தரமாக அமைப்பது உறுதி இரண்டாவது தீர்மானமாகவும், திருக்கேதீஸ்வர ஆலயத்தின் முக்கியத்துவம் கருதி இந்திய அரசாங்கம் திருக்கேதீஸ்வரத் திருப்பணிக்காக கோடிக்கணக்கான பணத்தைச் செலவிட்டுள்ளது. இந்நிலையில் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம், ஆன்மீகப் பெரியவர்கள் இணைந்து திருக்கேதீஸ்வரத்தையும், சூழலையும் காப்பாற்றித் தருமாறும், தற்போது நிலவி வரும் இந்துக் கோயில்கள் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட வேண்டுமெனவும் இந்தியத் தூதுவராலயத்தின் ஊடாக இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தல் ஆகிய தீர்மானங்கள் ஏகமனதான தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நல்லை ஆதீனகுரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ். சின்மயா மிஷன் நிலையத் தலைவர் சுவாமி சிதாகாசானாந்த சுவாமிகள், இந்துக் குருமார் ஒன்றியத் தலைவர் சி. ஜெகதீஸ்வரக் குருக்கள், மன்னார் மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியத் தலைவர் மஹாதர்மகுமாரக் குருக்கள், திருக்கேதீஸ்வரம் ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ கருணானந்தக் குருக்கள் , யாழ்ப்பாணம் வீணாகான குருபீடத்தைச் சேர்ந்த சிவஸ்ரீ சபா. வாசுதேவக் குருக்கள் மற்றும் வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், சைவப் பெருமக்கள் முன்னிலையில் மேற்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கூட்டத்தின் இறுதியில் சைவத்தின் மாண்பை வெளிப்படுத்தும் வகையில் சைவசமயத்தின் அடையாளமான நந்திக் கொடிகளை ஏந்தி ஆன்மீகப் பெரியவர்கள் வருகை தர இருமருங்கும் கூடியிருந்த பெருமளவான சைவப் பெருமக்கள் “ஓம் நமசிவாய” எனும் நாமத்தை உச்சரித்த வண்ணம் வலம் வந்து சைவத்தின் மகத்துவத்தை பறைசாற்றினர்.