20 வருடங்களுக்கு மேலாக பிரிந்திருந்த தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் ஆகியோர் தமிழ் மக்களின் நலனுக்காக மீண்டும் இணைய முடியுமானால் ஏன் தற்போது அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய முடியாது?
எனவே அனைத்து தமிழ் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் ஒரு பலமான அணியை உருவாக்குங்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ் ஊடக மையத்தில் நேற்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு பின்வரும் விடையங்களையும் தெரிவித்தார்.
மகேஸ்வரன் , ரவிராஜ் , லக்ஷமன் கதிர்காமர் என 500க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் சமஷ்டியை முன்வைக்க, மஹிந்த ஒற்றையாட்சியை முன்வைத்தார். அந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணித்தார்கள். அப்படியிருக்கையில் சமஷ்டி கோரிக்கையை 49% சிங்களவர்கள் ஏற்றே ரணிலுக்கு வாக்களித்தனர்.
சம்பந்தன், மாவை, சுமந்திரனை தவிர மிகுதி அரசியல் தலைவர்கள் கூட்டணிக்கு வாருங்கள். அவர்கள் மூவரும் அரசியலில் இருந்து விலகுவது தமிழ் மக்களுக்கு செய்யும் பெரிய உதவி. இல்லாவிடின் மக்கள் அவர்களை அரசியலில் இருந்து அகற்றுவார்கள்.
புலிகளின் ஏக பிரதிநிதி என கூறி நாடாளுமன்றம் சென்றவர்களை சந்திரிக்கா துரத்தியிருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பெயரால் எப்படி நாடாளுமன்றம் செல்ல முடிந்தது?
கள்ள வோட்டில் நாடாளுமன்ற போனோம் என்ற குற்ற உணர்ச்சி சற்றும் இல்லாம இன்று ஜனநாயகம் பேசுகின்றார்கள்.
பிரதமர் மஹிந்த என்னிடம் கோரினார், சமஷ்டி என பேச வேண்டாம் ‘இந்திய மொடல்’ என கேளுங்கள் என்றார். என்னுடைய ‘இந்திய மொடல்’ எனும் யோசனையை கோட்டாவும் ஏற்றுக் கொண்டுள்ளார் என மேலும் அவர் தெரிவித்தார்.