வைரஸ் தொற்று காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
1930களில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார மந்தநிலைக்கு பிறகு, உலக பொருளாதாரம் இப்போதுதான் இவ்வளவு கடுமையான நெருக்கடியை சந்திக்க போகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா கூறியுள்ளார்.
2021ஆம் ஆண்டில் கூட, இதிலிருந்து பாதி அளவே மீள முடியும் என்று அவர் கணித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நெருக்கடி, ஊரடங்கு காரணமாக நிறுவனங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மூடப்பட்டதால் 330 கோடி மக்கள், வேலையிழந்துள்ளார்கள் என ஐ.நாவின் ஆய்வு தெரிவிக்கிறது.
வைரஸ் தொற்று தீவிரமாகிய மூன்றாவது வாரத்தில் அமெரிக்கர்கள் 66 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். கொரொனா நெருக்கடி காலகட்டத்தில் மொத்தம் 1.6 கோடி அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்றால் அங்கு பல நிறுவனங்கள் மூடப்பட்டு, சுமார் 95 சதவீத அமெரிக்கர்கள் முடக்கபட்டுள்ளதால், 2,30,000 கோடி டாலர்கள் மதிப்பிலான நிவாரணத் நிதியை அந்நாடு அறிவித்தது.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், நாம் சந்திக்கும் “மிகவும் மோசமான நெருக்கடி” இது என இந்தவார தொடக்கத்தில் ஐ.நாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்திருந்தது.
கடுமையாக பாதிக்கப்படும் உலக பொருளாதாரம் சீராக பல ஆண்டுகள் ஆகலாம் என பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
2001ல் நிகழ்ந்த 9/11 தாக்குதல் அல்லது 2008ல் ஏற்பட்ட நெருக்கடியை விட உலக பொருளாதாரம் ஒரு பெரும் அதிர்ச்சியை சந்தித்துக் கொண்டு இருப்பதாக அதன் பொதுச் செயலாளர் ஏங்கல் குரியா சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி – BBC